சென்னை:
சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்திரன், 3 ஆண்டுகள் முன்பு வரை போலீசாரின் ரவுடி பட்டியலில் இருந்தவர்; 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு தலையை வெட்டி பிற மதத்தினர் மீது பழி போட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்து பிடிபட்டவர்; போலீஸ் பாதுகாப்புக்காக தம்மை பிற மதத்தினர் தாக்கிவிட்டதாக 2 முறை நாடகமாடியவர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் பாலச்சந்தர். இது முன்விரோதம் காரணமாக நடைபெற்ற படுகொலை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படுகொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கட்ட பஞ்சாயத்து
வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்தர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மக்கள் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்தார். 2017-ம் ஆண்டு பாலச்சந்தர் மீது சென்னை சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், பாலச்சந்தர் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார். எனக்கும் என் உறவினர் முரளி என்பவருக்குமான தொழில் பிரச்சனையில் தலையிட்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.
மதகலவர முயற்சி
அத்துடன் சிந்தாதரிப்பேட்டை இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் தாமே மாட்டு தலை ஒன்றை வைத்துவிட்டு பிற மதத்தினர்தான் அதை வீசியதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார். தமக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதற்காக இப்படி நாடகமாடியதாக பாலச்சந்தர் என்னிடமே கூறினார். இது தொடர்பான ஒலிப்பதிவையும் நான் இணைத்துள்ளேன் என கூறியிருந்தார்.
நாடகமாடியது அம்பலம்
பிரகாஷ் கொடுத்த புகாரை ஆய்வு செய்த போலீசார், பாலச்சந்தர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்புக்காக தம்மை 2 முறை பிற மதத்தினர் தாக்கிவிட்டதாகவும் பாலச்சந்தர் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனால் அப்போது போலீசார் பாலச்சந்தரை கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ரவுடி லிஸ்ட்டில்..
இவ்வழக்குகளில் சிறையில் இருந்து வெளியே வந்த பாலச்சந்தர் பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த நிலையில் 2019-ம் ஆண்டு சென்னை சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்து பாலச்சந்தர் பெயர் நீக்கப்பட்டது. அதேநேரத்தில் மாமூல் வசூலிப்பது, கட்ட பஞ்சாயத்து தொடர்பாக சிந்ததாரிப்பேட்டையில் சிலருடன் பாலச்சந்தருக்கு முன்விரோதம் இருந்தும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தால்தான் பாலச்சந்தர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்கிறது போலீஸ் வட்டாரங்கள். இதனிடையே பாலச்சந்தர் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் சிந்ததாரிப்பேட்டை பிரதீப் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.