சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு, தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா.முருகானந்ததிடம் வழங்கினார்.
The post ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.