ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு என பலர் நடித்துள்ள படம், ‘அகத்தியா’. பா.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி நடிகர் ஜீவா கூறியதாவது: இந்தக் கதையை இயக்குநர் பா. விஜய், சொல்லும் போது அவரிடம், ஏற்கெனவே ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன் என்றேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு இதில் ஹாரர் என்பது, கதை சொல்வதற்காகப் பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. அனைவரும் ரசிக்கும் வகையில் ‘மிக்ஸ்டு ஜானரி’ல் படத்தை பா.விஜய் உருவாக்கி இருக்கிறார். நல்ல மெசேஜும் இருக்கிறது.
அதற்காக ஹாரர், த்ரில்லர், காமெடி, ஆக் ஷன், அனிமேஷன், ஃபேன்டஸி ஆகியவற்றின் கலவையாக, குறிப்பாகக் குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாகத் தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள். படத்தின் கிளைமாக்ஸ் கிராபிக்ஸுக்கு ஒரு வருடம் காத்திருந்தோம். நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு ஜீவா கூறினார்.