சென்னை: அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மையத்தில் 2024ம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 216 தேர்வர்களில், 22 மகளிர் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள், உட்பட 48 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில், 7 ஆர்வலர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஜூலை 4ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை உண்டு உறைவிடத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேற்குறித்த காலத்திற்கு ஊக்கத் தொகையாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கப்பட்டது. தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலைசிறந்த வல்லுநர்களாலும் வரும் 18, 19 மற்றும் 20ம் தேதி ஆகிய 3 நாட்கள் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும் இப்பயிற்சி மையத்தில் பயிற்சிப் பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.
இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். DAF-I & DAF-II விவரங்களை பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இம்மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000 ஆண்டு தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தகவல்களை அறிந்து கொள்ள aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். மேலும் வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
The post அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்குபெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.