சென்னை: அடையாறில் நவீன வசதிகளுடன் மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அடையாறு சார்பதிவகம் கடந்த 1982ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் மொத்தம் 4955 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ரூ.295.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்நிதியாண்டில் இதுவரை 3680 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.190.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பதிவுத்துறை 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் தினந்தோறும் சராசரியாக 15,000 பொதுமக்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் எளிய பத்திரபதிவு சேவைகளை வழங்கி அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் தொடர்ந்து முதன்மை துறையாக விளங்கிவருகிறது . அதனை ஊக்குவிக்கவும் காலத்துக்கு ஏற்றவாறு பதிவுத்துறையின் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.