அன்றைய கால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதேபோல், அரசியல் சாராத அன்றைய நிகழ்வுகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு வருகிறேன். அந்த வகையில் சில தகவல்களைத் தருகிறேன்.
அந்தக் காலங்களில் பள்ளிகளில் தமிழ் பாடநூல் வழிகாட்டியாக விளங்கிய ‘கோனார் நோட்ஸ்’ மிகவும் பிரபலமானது. இதை எழுதிய ஐயன் பெருமாள் கோனார், புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின் திருச்சி ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். ஐயன் பெருமாள் கோனார் எழுதிய ‘கோனார் தமிழ் அகராதி’, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் – தமிழ் அகராதி ஆகும். இது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பயனுள்ளதாகக் கருதப்பட்டது.
சென்னை எழும்பூர் ஹால்ஸ் சாலையில் மினர்வா டுடோரியல் ஒன்று இருந்தது. அதன் நிறுவனர் பரசுராமன் தயாரித்த ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான துணை நூல்களும் அந்தக் காலத்தில் மாணவர்களிடையே பிரபலமாக இருந்தன.