நைரோபி: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், ”தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டன. இந்தியப் பங்குச்சந்தையின் போக்கு இன்று காலை தொட்டே கடும் வீழ்ச்சியை சந்தித்து சரிவுடனேயே முடிந்தது. இந்நிலையில், கென்யாவின் அறிவிப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.