புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. திறன் மேம்பாடு தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்தார். அதேநேரம், எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி, மணிப்பூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீதி வேண்டும், நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.