புதுடெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியது. அப்போது அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, அதானி விவகாரம், மணிப்பூர் நிலவரம், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றம் மற்றும் உ.பி.யின் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 18 நோட்டீஸ்களை வழங்கினர். இவை அனைத்தையும் ஏற்க ஜெகதீப் தன்கர் மறுத்து விட்டார்.