புதுடெல்லி: கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், பாஜகவைச் சேர்ந்த மீரட் தொகுதி உறுப்பினர் அருண் கோவில், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க தகாததாக அவை இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அருண் கோவில் கேள்வி எழுப்பினார்.