உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் சுமார் 7 லட்சம் பேர் வரை தற்கொலை செய்துகொள்கின்றனர்; குறிப்பாக, மிகக் குறைந்த – நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகள், தற்போது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளன.
2018 – 2022க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மனநலன் தொடர்பான தற்கொலை 44% அதிகரித்துள்ளது. தற்கொலை செய்துகொள்பவர்களில் இளைஞர்களே அதிகம் எனத் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் மனநல ஆரோக்கியம் சார்ந்த தீவிரக் கேள்விகளை எழுப்புகின்றன.