சென்னை: “பாஜக உடன் கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு. இது குறித்து ‘துக்ளக்’ குருமூர்த்தி என்ன பேசுவது? இவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும்" என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சாடியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 108 கிலோ பிரம்மாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.