சென்னை: சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்துவோம் எனவும், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியதுடன், மேல் விசாரணை நடத்தி, 11-ம் தேதி விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதேபோல் அமைச்சர் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்றபோது, அளித்த உறுதிமொழியை மீறி, இந்து மதத்தை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சியில் அவதூறாக பேசியிருக்கிறார்.