சென்னை: அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் துரிதப்படுத்திட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி இணைந்து செயல்பட அமைச்சர் சிவசங்கர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் களப்பணியாற்றி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களிடம் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடர்புகொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது முதல்வர் கூறுகையில் ‘‘167 நிவாரண முகாம்களில் மொத்தம் 6022 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் செய்துதர வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 14 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலூருக்கு 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
The post அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.