ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது.
2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா, “ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் பன்னாட்டு அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை இணைக்க இந்தி மொழியால்தான் முடியும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்துவிடும்.” என்று இந்தித் திமிரோடு பேசினார். அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
தற்போதும் அதைப்போல மீண்டும் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தித் திணிப்புக்கு எதிராக 1938-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டு மக்கள் மொழி உரிமைக்காகப் போராடியதை மறந்துவிட வேண்டாம்.
இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பா.ஜ.க. அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
சீமான்
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் தச்சதிகார செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.
பா.ஜ.க. அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித் திணிப்பினால் தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசமைப்புச் சட்டம் 343(3)-ன் படி ஆட்சி மொழிகள் சட்டம் நிறைவேறிய போது அன்றைய பிரதமர் நேரு ஒரு மொழி மற்றொரு மொழியை விட தேசியம் ஆனது என்ற பேச்சுக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்துறை மந்திரிஅமித்ஷாவின் உரை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும்.
ஒருநாடு, ஒரு மதம், ஒரு மொழி என்ற சங்பரிவாரக் கொள்கையை ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே உள்துறை மந்திரி அமித் ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.
மீண்டும் இந்தி மொழித் திணிப்பு முயற்சி நடக்கும் எனில் தமிழகத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.