நியூயார்க்: இந்தியா மீது விரைவில் பரஸ்பர வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகப்படியான வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். எனவே அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி அந்தந்த நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதிப்பதற்கான பரஸ்பர வரி விதிப்பு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சமீபத்தில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி சந்திப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் பதவியேற்பு விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரியை நாங்கள் விரைவில் அமல்படுத்துவோம். ஏனெனில் அவர்கள் எங்களிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள்.
அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கிறார்கள். அதே அளவு வரியை நாங்களும் அவர்களிடம் வசூலிக்கப் போகிறோம். இது மிகவும் எளிதானது. நியாயமானது. எதிலும் நாங்கள் நியாயமாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம். அதனால் வரியிலும் நியாயமான போக்கை கடைபிடிக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறார்களே அதை விட அதிகமாக யாருக்கும் வரி விதிக்க மாட்டோம்.
இதற்கு முன் இதைப் பற்றி எல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. கொரோனாவுக்கு பிறகு உலக பொருளாதார நிலை மாறிவிட்டதால் இந்த பரஸ்பர வரி விதிப்பு அவசியமாகிறது. இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார். முன்னதாக டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ‘‘பரஸ்பர வரி குறித்து பிரதமர் மோடியிடம் நேரிலேயே பேசி விட்டேன். இந்த விஷயத்தில் யாரும் என்னுடன் விவாதம் செய்ய முடியாது’’ என கண்டிப்பாக கூறியது குறிப்பிடத்தக்கது.
* எப்போது அமலுக்கு வரும்?
புதிய வர்த்தக அமைச்சர் லுட்னிக் தனது சமீபத்திய பேட்டியில், ‘‘பரஸ்பர வரி விதிப்புக்கான ஆய்வுகள் நடத்த வேண்டி உள்ளது. எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு வரி என்பது குறித்து பல தகவல்கள் திரட்ட வேண்டி உள்ளது. எனவே பரஸ்பர வரி விதிப்பு வரும் ஏப்ரல் 2 அல்லது அதற்கு முன்பாக அமலுக்கு வரலாம்’’ என்றார்.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி இந்தியா மீது விரைவில் பரஸ்பர வரி விதிக்கப்படும் appeared first on Dinakaran.