புதுடெல்லி: அமெரிக்க சட்டங்களை மீறும் மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஒன்றிய வௌியுறவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய நாட்டவர்கள் உள்பட பலர் வௌியேற்றப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, “அமெரிக்காவின் சட்டங்களை பின்பற்றினால் அமெரிக்கா அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் பாலஸ்தீன சார்பு போராட்டங்களில் ஈடுபடுவது உள்பட பல்வேறு சட்ட மீறல்களை செய்பவர்கள் வௌியேற்றப்படுவார்கள். அமெரிக்க சட்டங்களை மீற நினைப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்திய குடும்பங்களின் உறவினர்கள் உள்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் நபர்கள் தாமாக முன்வந்து தங்கள் நாடுகளுக்கு திரும்ப வேண்டும். உங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப இன்னும் வாய்ப்பு உள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் கடுமையான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை தவிர்க்க தாமாக முன்வந்து வௌியேறுவார்கள் என நம்புகிறோம்” என எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல இந்திய மாணவர்களின் எப்-1 விசாவை அமெரிக்கா ரத்து செய்வது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திய தூதரகம் மற்றும் மாணவர்களுடன் அரசு தொடர்பில் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் அதன் எல்லைகளை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. சட்டங்களை மீறுபவர்களை அமெரிக்கா வரவேற்காது” என தெரிவித்தார்.
* இருநாடுகளின் பிரச்னை பற்றி விவாதிக்கப்படும்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சின் இந்திய வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த மார்கரெட் மேக்லியோட், “ஜே.டி.வான்ஸ் ஜெய்ப்பூர், ஆக்ராவுக்கு செல்வதற்கு முன் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது இருநாடுகளின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக இருவரும் விவாதிப்பார்கள்” என்றார்.
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, “இந்திய சட்டத்தின்கீழ் நீதியை எதிர்கொள்ள ராணாவை அமெரிக்கா நாடு கடத்தியது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஒத்துழைக்கும்” என்று மார்கரெட் மேக்லியோட் கூறினார்.
இந்திய மாணவர்கள் விசா ரத்து பற்றி அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்படுமா?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி 327 சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள். விசா ரத்துக்கான காரணம் சீரற்றதாக, தௌிவற்றதாக உள்ளது. இது கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இதை கவனத்தில் கொண்டு ஒன்றிய வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வௌியுறவு அமைச்சகத்திடம் கவலையை பதிவு செய்வாரா? கேள்வி எழுப்புவாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post அமெரிக்க சட்டங்களை மீறும் மாணவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.