வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் (FBI) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். எஃப்பிஐ-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமனம் வியாழக்கிழமை மேலவையால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஷ் படேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலுக்க காஷ் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்காக நான் பெருமையடைகிறேன். இதற்காக அதிபர் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் போன்டி ஆகியோரின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டைப் பாதுகாப்பதில் எஃப்பிஐ அமைப்புக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.