கோவை: “இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ‘சைமா’ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர். சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசு, ஜவுளி ஏற்றுமதியை தற்போதைய 37 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, இந்திய ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும். இதை நோக்கமாக கொண்டு இங்கிலாந்து நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.