வாஷிங்டன்: அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1.08 லட்சம் திருடிய இந்திய பெண் கைதான நிலையில், அந்தப் பெண்ணின் வீடியோவும் வைரலாகி வருகிறது. சமீப காலமாக, அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுபோன்ற திருட்டுக் குற்றச்சாட்டுகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் விசா நிலையில் ெபரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ெஹச்-1பி விசா புதுப்பித்தல், கிரீன் கார்டு விண்ணப்பங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், தவறு நிரூபிக்கப்பட்டால் நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது.
இந்தச் சூழலில், தற்போது இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ‘டார்கெட்’ என்ற சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக கடைக்குள் சுற்றித் திரிந்த அப்பெண்ணின் நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சுமார் $1,300 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.08 லட்சம்) மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு, பணம் செலுத்தாமல் வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார். இது தொடர்பான போலீசாரின் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘நான் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல; இங்கே இருக்கப் போவதும் இல்லை. நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன்’ என்று அப்பெண் போலீசாரிடம் கெஞ்சுகிறார்.
அதற்கு பெண் அதிகாரி ஒருவர், ‘இந்தியாவில் திருடுவதற்கு அனுமதி உண்டா?’ என கேட்டார். தொடர்ந்து அப்பெண்ணைக் கைது செய்த போலீசார், அவர் மீது கடுமையான குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதையடுத்து, விருந்தினராக ஒரு நாட்டிற்குச் சென்று அந்நாட்டு சட்டத்தை மீறுவது வெட்கக்கேடானது என்றும், அந்தப் பெண் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கெடுத்துவிட்டார் என்றும் பலரும் கடுமையான விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.
The post அமெரிக்காவில் ரூ.1 லட்சம் திருடிய இந்திய பெண் கைது appeared first on Dinakaran.