போர்கள், தேர்தல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், அரசியல் மாற்றங்கள் என 2024ஆம் ஆண்டில் உலகம் பல திருப்பங்களைக் கண்டது. புத்தாண்டிலும் தொடரவிருக்கும் அளவிலான தாக்கங்களைச் செலுத்தும் நிகழ்வுகள் என்றும் அவற்றைச் சொல்லலாம். சில நிகழ்வுகள் அந்தந்த நாடுகளின் எல்லையையும் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருளாகின.
வல்லரசின் புதிய முகம்: உலக மக்கள்தொகையில் 49 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்தலைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பாகிஸ்தான் என 64 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடந்துள்ளது. நவம்பர் 5இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.