வாஷிங்டன்: ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பாடாததால் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுக்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து வருகின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் உக்ரைனுக்கான ஆயுத உதவி தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் சந்தித்து போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின் இடையே இருநாட்டு தலைவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினார். இந்த மோதலின் எதிரொலியாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கான அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் மற்றும் மூத்த தேசிய பாதுகாப்பு உதவியாளர்கள் இடையே வெள்ளை மாளிகையில் நடந்த தொடர் சந்திப்புக்களை தொடர்ந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு டிரம்ப் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உக்ரைன் உடன்படாததே இதற்கு காரணம் என்று அமெரிக்கா தெரிவிதுள்ளது. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையானது உக்ரைனுக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்பிலான உதவியை தடை செய்கின்றது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா -உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை அமெரிக்கா 65.9பில்லியன் டாலர் ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை அளித்த ஆதரவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ள உக்ரைன் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் நோக்கத்திலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில், ‘‘உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று பொதுவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராணுவ உதவிகளை நிறுத்தியது உக்ரைனுக்கு பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. எனவே அமெரிக்காவுக்கு உக்ரைன் அடிபணியுமா? போர் முடிவுக்கு வருமா? என்பது தெரியவில்லை. ஆனால் போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் அமெரிக்கா இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
* 4 மாதத்தில போர் முடிந்துவிடும்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களில் 40 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. 30 சதவீதத்தை அமரெிக்கா சப்ளை செய்து வந்தது. மீதமுள்ள 30 சதவீத ஆயுதங்கள் வேறு நாடுகளிடம் இருந்து வாங்கப்பட்டன. இப்போது, அமெரிக்கா சப்ளை செய்யும் 30 சதவீத ஆயுதம், தளவாடங்கள் சப்ளை நின்றுபோனால் நீண்ட நாட்கள் உக்ரைனால் போரில் தாக்குபிடிக்க முடியாது, அதிகபட்சமாக இரண்டு முதல் 4 மாதத்தில் உக்ரைனை ரஷ்யா முழுமையாக கைப்பற்றும் என்று பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
* டிரம்ப் விரும்புவது என்ன?
உக்ரைனுக்கான உதவிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், டிரம்ப் என்ன விரும்புகிறார்? அவரது செயல்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை என்று உக்ரைன் வெளியுறவு விவகார குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் போரில் ஈடுபட்டு இருக்கும் உக்ரேனிய வீரர் ஒருவர் கூறுகையில்,‘‘நான் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன். ஆனால் இந்த உணர்வு ஏதோ ஒரு காரணத்திற்காக ஆழமாக இல்லை. டிரம்ப் தரப்பில் இருந்து இதுபோன்ற ஒன்றை நான் எதிர்ப்பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
* ஐரோப்பிய நாடுகளால் ஈடுகட்டமுடியுமா?
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவி அளித்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா திடீரென ஆயுத உதவியை நிறுத்தி உள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளால் ஈடுகட்ட முடியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயுத உற்பத்தி என்பது நீண்ட கால திட்டம். உடனடியாக புதிய ஆயுதங்களை யாராலும் தயாரித்து சப்ளை செய்ய இயலாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.