அம்பத்தூர்: அம்பத்தூர் 86வது வார்டான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பேருந்தில் செல்ல வரும் பயணிகள், கடும் வெயிலில் திறந்தவெளி பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. நிழற்குடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள த.வெ.கவின் தண்ணீர் பந்தலை உடனடியாக அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதனால் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியினரின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் மண்டலம், 86வது வார்டுக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-திருவள்ளூர் பிரதான சாலையில் உள்ள மாநகர பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த வாரம் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
இப்பேருந்து நிழற்குடையில் ஏற்கெனவே போதிய இடவசதி இல்லாததால், ஏராளமான பயணிகள் கடும் வெயிலில் திறந்தவெளியில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. தற்போது இந்த நிழற்குடையில் த.வெ.கவின் தண்ணீர் பந்தல் அமைத்திருப்பதால், அங்கு நிற்க வேண்டிய அனைத்து பயணிகளும் தற்போது வெயில் நேரத்தில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பேருந்து நிழற்குடையில் உள்ள தண்ணீர் பந்தல் அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக உள்ளது. எனவே, அம்பத்துர் 86வது வார்டில் உள்ள பேருந்து நிழற்குடையில் த.வெ.கவினரால் அமைக்கப்பட்டு உள்ள தண்ணீர் பந்தலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்
The post அம்பத்தூர் 86வது வார்டில் பேருந்து பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து தவெக தண்ணீர் பந்தல்: வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.