புதுடெல்லி: பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள தொடர் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் எம்பிக்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், "காங்கிரஸ் எம்பிக்களும், மத்திய செயற்குழு உறுப்பினர்களும் நாளையும் நாளை மறுநாளும் (டிச. 22 மற்றும் 23) தங்கள் தொகுதிகளில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும். அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ராஜினாமாவை வலியுறுத்த வேண்டும். டிசம்பர் 24-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர், அம்பேத்கரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து 'பாபா சாகேப் அம்பேத்கர் சம்மன் பேரணி' நடத்தி, குடியரசுத் தலைவர் பெயரில் ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.