அம்பை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக் கோட்டம், அம்பை வனச் சரகத்திற்குட்பட்ட மலையடிவார பகுதிகளில் அடிக்கடி வனத்திலிருந்து வெளியேறும் கரடி, மிளா, காட்டுப்பன்றி மற்றும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதும், வீட்டு விலங்குகளை தாக்குவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனியில் உள்ள அக்னி சாஸ்தா கோயில் வளாகத்தில் கடந்த மார்ச் 20ம்தேதி ஆண் கரடி ஒன்று கோயிலில் உள்ள பூஜை பொருட்களை சேதப்படுத்தி, சர்வ சாதாரணமாக சுற்றி வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்ததையடுத்து கோயில் வளாகத்தில் கூண்டு வைத்து கரடி பிடிக்கப்பட்டது. பின்னர்அதை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் வனத்துறையினர் விட்டனர்.
இதேபோன்று அயன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு. தெற்கு பாப்பாங்குளம் ஆகிய இடங்களிலும் கரடி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது மீண்டும் அதே கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி அக்னி சாஸ்தா கோயிலில் நேற்றிரவு மீண்டும் பெண் கரடி ஒன்று சுற்றி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் ஆண் கரடியை கூண்டு வைத்து பிடித்தது போன்று பெண் கரடியையும் பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post அம்பையில் மீண்டும் கரடி அட்டகாசம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.