* காலை 10 முதல் 3 மணி வரை இயக்க அனுமதிக்க வேண்டும்
* விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
அரக்கோணம் : அரக்கோணத்தில் டன் கணக்கு கரும்புகளுடன் பகல் முழுவதும் காத்திருக்கும் வாகனங்களை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
இங்கு,ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் டன் அளவிற்கு கரும்பு அரவை செய்து, சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கரும்புகளை லாரி, டிராக்டர் மூலம் விவசாயிகள் கொண்டு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி,சோளிங்கர் ஆகிய தாலுகா பகுதிகளில் விவசாயிகள் கருப்பு பயிர்களை அதிகம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயிரிடப்படும் கரும்புகள் அக்டோபர்-மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுமார் 25,000 டன் கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து திருவாலாங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலைக்கு வாகனங்கள் மூலம் ஏற்றிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அரக்கோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து லாரி, டிராக்டர் மூலம் கரும்புகளை திருவாலாங்காடு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் எடுத்துச் செல்லும்போது பகல் நேரமாக இருந்தால், அரக்கோணத்தில் லாரி,டிராக்டர்கள் சாலையோரம் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. காரணம், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி,சோளிங்கர் ஆகிய தாலுகாக்களில் பயிரிடப்படும் கரும்புகளை வெட்டி லாரி, டிராக்டர் மூலம் திருவாலாங்காட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு கொண்டு சென்று வருகிறோம். இதுபோன்று செல்லும்போது அரக்கோணத்தில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டு, டிராக்டர், லாரிகள் தடுத்து நிறுத்தப்படுகிறது.
இதனால்,பகல் நேரம் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இரவு நேரம் ஆனபிறகு ஒவ்வொரு வாகனங்களாக அனுப்பப்படுகிறது. இதனால், டிராக்டர் மற்றும் லாரி போன்ற வாகனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல்,பகல் நேரங்களில் நீண்ட நேரம் கரும்புகளுடன் வாகனங்கள் ஆங்காங்கே சாலை ஓரம் நிறுத்தப்படுவதால், கரும்புகள் காய்ந்து,இதனால் எடை அளவு குறைந்து விடுகிறது.
மேலும், இரவு நேரங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று முந்தி செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, அரக்கோணம் நகரத்தை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்காமல் இருக்கலாம்.
ஆனால், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் உள்ள இடைப்பட்ட நேரங்களில் கரும்பு ஏற்று செல்லும் வாகனங்களை அனுமதித்தால் விவசாயிகள் ஆகிய எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
அரக்கோணத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுமூக தீர்வினை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பகல் நேரங்களில் கரும்பு வாகனங்களை அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்,விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரக்கோணம் வழியாக திருவாலாங்காடு சர்க்கரை ஆலைக்கு செல்ல பல டன் கரும்புகளுடன் பகல் முழுவதும் காத்திருக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.