சென்னை: அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறையில் உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது பணிப்பதிவேடு விவரங்கள், சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இந்த விவரங்கள் அரசு ஊழியர் தொடர்பான தனிப்பட்ட விவரங்கள் எனவும், அந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், அவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறி தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.