மதுரை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவதற்கு திமுக அரசின் தந்திர நடவடிக்கை என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக அரசின் சட்டமன்றக் கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியபின் ஆலோசனைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.