சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய, குரூப் 1 தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட 180 மாணவர்களில், 62 பேர் அண்ணா நிர்வாகக் கல்லூரியினால் நடத்தப்பட்ட நேர்முக மாதிரித் தேர்வுகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டு, பணியாளர்களைத் தெரிவு செய்தல், பணி நியமனம், பதவி உயர்வுகள் மற்றும் பணி மாறுதல் நியமனம் ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விதிகளை வகுப்பது குறித்தும், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீதான மேல்முறையீடு குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் மார்ச் 2025 வரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 24,599 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 8,616 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 4,329 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 19,472 பணியிடங்களும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வாயிலாக 279 பணியிடங்களும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வாயிலாக 9,132 பணியிடங்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 2,400 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. கருணை அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக 2,730 பணியிடங்களும், பொதுச் சேவைத் துறைகளில் 4,568 பணியிடங்களும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக 2,673 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைமூலம் சுமார் 16,780 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின்மூலம் 1,352 பணியிடங்களும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் குரூப் 1 மற்றும் 1ஏ-ல் 72 பணியிடங்களும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்மூலம் சுமார் 2,104 பணியிடங்களும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் சுமார் 3,353 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் சுமார் 7,535 பணியிடங்களும் சேர்த்து, மொத்தமாக 1,55,992 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post அரசு துறைகளில் காலியாக உள்ள 1,55,992 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.