திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லமாட்டீர்களா என கேள்வி கேட்ட பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அப்பேருந்தின் டிரைவர், கண்டக்டர் தாக்க முயற்சித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ நேற்று மாலை மக்களிடையே பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கல்பாக்கம் அருகே விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், நேற்று காலை சென்னை சென்றிருந்தார். மாலை வீடு திரும்புவதற்காக, இசிஆர் சாலையில் பனையூர் சுங்கச்சாவடி அருகே கல்பாக்கம் செல்லும் அரசு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு பேருந்து வந்துள்ளது. அதில், கல்பாக்கம் செல்ல வேண்டும் என்று இப்பெண் கேட்டதற்கு, கல்பாக்கத்தில் பேருந்து நிற்காது என்று கண்டக்டர் கறாராக கூறிவிட்டு அப்பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
பின்னர் அப்பெண் மற்றொரு அரசு பேருந்து மூலமாக கல்பாக்கம் வந்திறங்கியுள்ளார். அங்கு தன்னை பனையூரில் ஏற்றாமல் கல்பாக்கத்தில் நின்றிருந்த அரசு பேருந்து கண்டக்டர், டிரைவரிடம் அப்பெண் நியாயம் கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரமான சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்ற டிரைவரும் கண்டக்டரும் அப்பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், அவரை சரமாரி தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பயணிகளும் செல்போனில் வீடியோவாக படம்பிடித்து, பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து, பெண் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூட தெரியாத கண்டக்டர், டிரைவர்கள்மீது சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் பேருந்தில் அனைத்து பயணிகளையும் ஏற்றி செல்வதுடன் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post அரசு பேருந்தில் ஏற்றி செல்லாமல் பெண்ணை தாக்க முயன்ற டிரைவர், கண்டக்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.