சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கந்தசாமி(அதிமுக) பேசுகையில் “ சூலூர் தொகுதியில் பல தொழிற்சாலைகள் வந்துவிட்டது. நூலாலைகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் உள்ளது. அதில் அதிகளவு பெண்கள் பணிபுரிகின்றனர். ஆகையால் அங்கு அரசு மகளிர் விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும். தங்கும் விடுதிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள், என்னென்ன வசதிகள் உள்ளது” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்” தோழி தங்கும் விடுதிகள், முன்னேறும் மகளிர் விடுதிகள் என்று அடையாளத்தோடு தமிழகம் முழுதும் மகளிர் தங்கு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியில் அரசு மகளிர் விடுதி 50 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 14 மகளிர்கள் தங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்த விடுதியில் மறு சீரமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோன்று கோவையில் மற்றொரு தோழி தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. 2024 நிதிநிலை அறிக்கையில் கோவையில் 200 படுக்கைகள் கொண்ட தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 216 தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
கோவை, மதுரை, சென்னை மாவட்டத்துக்கு விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, தோழி விடுதியில் பயோமெட்ரிக் முறை உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும்படி சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வைபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இணையதளத்தின் மூலம் முன்பதிவு, கொதிநீர் கலன் வசதி, தினசரி அரை பராமரிப்பு, அவர்களே சமைக்கும் முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் இரு நாள் வாடகைக்கும் அறை உள்ளது. சென்னையை பொறுத்தவரை தனிநபர் வாடகை 6500 ரூபாய் உள்ளது. 2பேர் இருந்தால் ரூ.5,500, 3பேர் அல்லது 4 பேர் இருந்தால் ரூ.4500 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது “ என்றார்.
The post அரசு மகளிர் தங்கும் விடுதிகளில் கட்டணம் எவ்வளவு: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் appeared first on Dinakaran.