சென்னை: அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வருகின்ற 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதி உடன் காலாவதியானது. இதனால் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தனர்.
இந்நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கரன் தலைமையில் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் 27ம் தேதி தொமுச உள்ளிட்ட கட்சி சார்ந்த 13 தொழிற்சங்கங்களும், 28ம் தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொழிற்சங்கங்களை இரண்டாக பிரித்து ஊதிய உயர்வான பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். கடந்த முறை அடிப்படை ஊதியத்தை 5% உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 15% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக டிச. 27, 28ல் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.