பிரம்ம கான சபாவின் ஏற்பாட்டில் பி.எஸ். தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் 17ஆவது ஆண்டாக ‘நல்லி நாகஸ்வர தவிலிசை விழா’ ஜனவரி 26 தொடங்கி பிப்ரவரி 4 வரை வெகு விமரிசையாக நடந்தது. விழாவின் நிகழ்ச்சிகளில் பல சிறப்பு அம்சங்கள் நடந்தேறின.
புல்லாங்குழல், நாகஸ்வரம், தவில், கடம் ஆகிய வாத்தியங்களைக் கொண்டு அமைந்த ஒரு அரிதான கச்சேரியும் அரங்கேறியது. மயிலிறகின் வருடலைப் போன்ற ஜெயந்தின் புல்லாங்குழலின் மென்மையும், 'பழைய சீவரம் காளிதாசின் (அசுர வாத்தியமாக அறியப்படும்) நாகஸ்வரமும் ஒன்றுக்கொன்று அனுசரனையுடன் நாதசங்கமமாகின. இதற்கு ஒத்திசைவாக மன்னார்குடி வாசுதேவனின் தவிலும் டாக்டர் கார்த்திக்கின் கடமும் தாளத்தில் சங்கமித்தன.