மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, 11-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 5-7, 6-1, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தார். நாளை (25-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் அரினா சபலென்கா – மேடிசன் கீஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.