சாங்சோவ்: சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யூ சின் ஆங்க், யி தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 16-21, 12-21 என்ற நேர் கணக்கில் தோல்வி அடைந்தார்.