கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்காவில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பூங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அவதானப்பட்டி ஏரியை ஒட்டி சிறுவர் பூங்கா, கடந்த 2005ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த பூங்கா மற்றும் ஏரிக்கு தேவையான நீராதாரம், கே.ஆர்.பி அணையில் இருந்து கிடைக்கிறது. எனவே, இது வற்றாத ஏரியாகவும், படகு சவாரிக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இருப்பது கே.ஆர்.பி. அணை மற்றும் அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்கா மட்டும் தான்.
கடந்த 2005ம் ஆண்டு வரை அரசால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், 2008ம் ஆண்டு ஏலம் விடப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் குடிநீர் வசதி, கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம், பூங்காவில் அமர இருக்கைகள் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், ஏரியை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளதால் படகு சவாரி சரிவர செயல்படுவதில்லை. படகுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரிதும் ஏமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரை, கே.ஆர்.பி., அணை மற்றும் அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்கா ஆகிய இரண்டு மட்டும் தான், சுற்றுலாத் தலமாகவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் விளங்குகிறது.
அவதானப்பட்டி ஏரி சிறுவர் பூங்காவில், குடிநீர் வசதி, கழிவறை வசதி, பூங்காவில் அமர்வதற்கான நாற்காலிகள் என எந்த அடிப்படை வசதியும் இல்லை. பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ10 வசூலிக்கின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ20 முதல் ரூ30 வரையும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ50 முதல் ரூ100 வரையும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் வாகனங்கள் நிறுத்த முறையான பார்க்கிங் வசதி கிடையாது. வெயிலிலும், மழையிலும் தான் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது. மேலும், பூங்காவின் சுற்றுச்சுவர்கள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகளை வைத்து, பரிசல் சவாரி செய்கின்றனர். ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை கூட அகற்றுவதில்லை.
அவதானப்பட்டி ஏரியை மீன் வளர்க்க ஏலம் எடுத்தவர்கள், ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக அழுகிய தக்காளிகள், கிழங்குகள் உள்ளிட்டவற்றை கொட்டுவதால், ஏரி நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சிறுவர் பூங்கா அமைத்து 20 ஆண்டுகள் ஆவதால், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பரமாரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. பூங்காவில் உள்ள உணவகத்தில், தரமற்ற உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், பூங்காவுக்கு குழந்தைகளுடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பூங்காவில் உரிய ஆய்வு நடத்தி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியில் ஆக்கிமித்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்றி, புதிய படகுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post அவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாத சிறுவர் பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்; சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.