ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 253.6 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவின் சின்லு பெங் 253 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், கொரியாவின் யூன்ஜி குவான் 231.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஜூனியர் பிரிவில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் சாம்பவி ஷ்ரவன், ஹிருதய ஸ்ரீ கொண்டூர், இஷா அனில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1896.2 புள்ளிகளை குவித்து ஆசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.