சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. அதன்படி ஆட்டோவில் பயணம் செய்யும் முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கூடுதல் கட்டணம் உயர்த்தப்படும். மேலும், இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பயணம் செய்தால் பகல் நேர கட்டணத்தை விட 50% அதிகம் வசூலிக்கப்படும். காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 50 பைசா பெறப்படும் எனவும் இந்த புதிய கட்டண உயர்வு பிப்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆட்டோ சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்; ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் பிப்.1 முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கவனத்திற்கு வந்ததுள்ளது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுகிறதா?.. அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: போக்குவரத்துத் துறை விளக்கம்!! appeared first on Dinakaran.