சென்னை: விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத கால இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் “ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா.?” என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிவித்தார். கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.