திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.