சென்னை: ஆன்லைனில் தாக்கலாகும் பத்திரங்களை அதே நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு. கடன் அடமான பத்திரங்களை ரத்துசெய்யும் ஆவணம் உள்ளிட்டவற்றை ஆன்லைன் முறையில் பதிவுசெய்யலாம். சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வராமல் இந்த பத்திரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்தாலே போதும். ஆன்லைனில் தாக்கலாகும் ஆவணங்களை சார்பதிவாளர்கள் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடன் கணக்கு முடித்தல் உள்ளிட்ட, குறிப்பிட்ட சில இனங்களில் ஆவணங்களை, ‘ஆன்லைன்’ முறையில், மக்கள் தாக்கல் செய்கின்றனர். இதில், ஆதார் வழி அடையாளம் சரி பார்க்கப்பட்டதை, சார் – பதிவாளர்கள் ஏற்க வேண்டும். ஆன்லைன் முறையில் தாக்கலானதை அதிகாரப்பூர்வமானதாக ஏற்று, அதை அதே நாளில் பதிவு செய்ய வேண்டும்.
அதில் கூடுதல் விபரங்கள் ஏதாவது தேவைப்பட்டால், அடுத்த நாள் முதல் ஆவணமாக, அதை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஆன்லைன் வழி ஆவணங்களை பதிவு செய்த பின்னரே, மற்ற நேரடி பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும். உரிய காரணங்கள் இன்றி, இத்தகைய பத்திரங்களை திருப்பி அனுப்பக் கூடாது.
உரிய காரணம் இருந்தாலும், ஒரு முறைக்கு மேல் இதற்கு திருப்பி அனுப்புவதற்கான ரசீதை பயன்படுத்தக் கூடாது. தேவையில்லாமல், ஆவணதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது. இதில் கையொப்பம் இட்ட ஆவணம் இல்லை என்பதை புரிந்து, சார்பதிவாளர்கள் செயல்பட வேண்டும்.
The post ஆன்லைனில் தாக்கலாகும் பத்திரங்களை அதே நாளில் பதிவுசெய்ய வேண்டும்: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.