தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. பாஜக அளித்த பல்வேறு வாக்குறுதிகள் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியை விட சிறப்பாக இருந்ததும் அக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த முறை தனித்தனியாக போட்டியிட்டதும் அக்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
பொதுவாக இணைந்திருக்கும் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துதனித்தனியே போட்டியிட்டால் இருதரப்பையும் தோற்கடிப்பது இந்திய அரசியலில் மக்கள் வழக்கமாக கொடுக்கும் தண்டனையாகவே இருந்து வருகிறது. ஆம் ஆத்மியும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் வெளிவந்தாலும், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை கொள்கை ஆட்டம்கண்டதே இந்த முறை அந்தக் கட்சி தோல்வியடைந்ததற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது.