சென்னை: ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வியால் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது உட்பட 10 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.