உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள் சந்திரசேகர் ஆஸாத் கட்சியை ஊக்கப்படுத்தி உள்ளது. இதன் 2 தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பி, அசாதுதீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகளை அக்கட்சி பின்னுக்கு தள்ளி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் தலித் ஆதரவு கட்சியாக உருவாகி வளர்ந்தது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி). இதன் தலைவர் மாயாவதியை 5 முறை முதல்வராக்கிய பிஎஸ்பி-க்கு இப்போது சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டியிட்ட பிஎஸ்பி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் விலகியிருப்பது பிஎஸ்பியின் வழக்கம். ஆனால், இந்த முறை உ.பி.யின் 9 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.