துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக கூப்பர் கானொலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டத்தின் முதல் பந்தை இந்தியாவின் முகமது ஷமி வைடாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹட் லெக் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது மட்டையில் பட்டு ஷமியை நோக்கி வந்தது. அதை வலது கையால் ஷமி பிடிக்க முயன்ற போது நழுவி கீழே விழுந்தது.