ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்வார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 34, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்தன.