சென்னை: நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் அரசியல்!: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு இந்திய கம்யூ. கண்டனம்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றி வருவது ஒன்றிய அமைச்சருக்கும் தெரியும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவேன் என கூறுவதுதான் அரசியல். கல்வி நிதியை ஒதுக்காமல் ஒன்றிய அரசுதான் அரசியல் செய்கிறது என இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
கல்வியில் பா.ஜ.க.தான் அரசியல் செய்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்த மாட்டார். இருமொழிக் கல்விக் கொள்கையில் படித்தவர்கள், சமச்சீர் கல்வியில் படித்தவர்கள்தான், உலகம் போற்றும் வல்லுநர்களாக இருக்கிறார்கள். மும்மொழி கொள்கை RSS-ன் சித்தாந்தம், மனுதர்மத்தில் உள்ளதை திணிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதுதான் அரசியல். இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்காது. கல்வி நிதி தரமாட்டேன் என்று கூறுவது சர்வாதிகாரம். ஒன்றிய அரசு எந்த கவுரவமும் பார்க்காமல் உடனடியாக தமிழ்நாட்டுக்கு நிதியை வழங்க வேண்டும். மேலும், வரும் 28ம் தேதி சென்னை வரும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
மொழி கொள்கை பிரச்னை: கல்வியாளர் நெடுஞ்செழியன் தாக்கு
மொழியை வைத்து கல்வியை பந்தாடுகின்றது ஒன்றிய அரசு என கல்வியாளர் நெடுஞ்செழியன் கடுமையாக சாடியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் முறையான கொள்கையே கிடையாது, கல்விக்குள் அரசியலை புகுத்துவது ஏற்புடையதல்ல. கல்வியை கால்பந்து போல், இங்கும் அங்கும் உதைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மற்ற விஷயங்களை தீர ஆராயாமல் கொள்கையை வகுப்பது அடுத்த தலைமுறை குழந்தைகளின் கல்வியை பெரிதளவில் பாதிக்கும் என்றார்.
“ஒன்றிய அரசின் செயல்பாடு மாநில உரிமைகளுக்கு எதிரானது”: வன்னி அரசு எச்சரிக்கை
ஒன்றிய அரசின் செயல்பாடு மாநில உரிமைகளுக்கு எதிரானது என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எச்சரித்துள்ளார். ஒரே நாடு ஒரே மொழி என்பதை திணிக்க பல்வேறு வகைகளில் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தி மொழியை திணிக்க முயல்வது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என வன்னி அரசு தெரிவித்தார்.
மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்!: ஜெயக்குமார் காட்டம்!
மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். உலகம் போற்றும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், இந்தியையா கற்றுக் கொண்டார்?. சங்க இலக்கியங்களையும், ஐம்பெருங்காப்பியங்களையும் எழுதியவர்கள் இந்தியை கற்றுக்கொண்டா எழுதினார்கள்?. உலகில் முதலில் தோன்றிய மொழியான தமிழை அழிக்கும் நோக்கில், இந்தியை புகுத்த நினைக்கிறார்கள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசியல் யார் செய்கிறார்கள்?: டி.கே.எஸ்.இளங்கோவன்
கல்வி நிதி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? என திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை பா.ஜ.க. அரசு மதிக்கவில்லை. 22 மொழிகளில் இந்தி மட்டும் எதனால் உயர்ந்த மொழி என்று ஒன்றிய அரசு விளக்க வேண்டும். உத்தரப்பிதேசத்தில் தமிழ் படிக்கின்றனரா?, அல்லது மத்தியப்பிரதேசத்தில் தெலுங்கு படிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு முடிவுசெய்யும் என்று அவர் கூறினார்.
பா.ஜ.க.தான் அரசியல் செய்கிறது: ஈ.ஆர்.ஈஸ்வரன் காட்டம்
தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என கொ.ம.தே.க. ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கை காரணமாகத்தான் நாம் இன்று ஆங்கிலத்தில் வலிமையாக இருக்கிறோம் என்று வர கூறினார்.
ஒன்றிய அமைச்சருக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்ற தர்மேந்திர பிரதானுக்கு தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். மொழி கொள்கையில் தோல்வி என்பதே தமிழ்நாட்டுக்கு கிடையாது. சென்னையில் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
The post இதுதான் அரசியல்!.. மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்!: தர்மேந்திர பிரதானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பதிலடி!! appeared first on Dinakaran.