சென்னை: இதுதான் தமிழ்ச் சமூகம்; கல்விதான் நம் உயிரினும் மேலானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். +2 தேர்வெழுத சென்ற மாணவர்களை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்;
அம்மா போயிட்டு வரேன் மா..!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாயார் அதிகாலையில் உயிரிழந்த நிலையிலும் அந்த சோகத்தையும் மறைத்துக்கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார் மாணவர் சுனில் குமார். அம்மாவின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலில் விழுந்து ஆசி பெற்ற சுனில் குமார், தேர்வு எழுதி விட்டு வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக..!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் முதல்முறையாக கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய பார்வை மாற்றுத்திறனாளியான 12ம் வகுப்பு மாணவர் ஆனந்தன். பூந்தமல்லியில் பார்வை குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், தமிழ்நாடு அரசு ஏற்பாட்டின் பேரில் கடந்த 3 ஆண்டுகளாக கணினியில் தேர்வெழுத பயிற்சி பெற்று வந்துள்ளார்.
மகளை +2 தேர்வு அறைக்கு தூக்கி ஓடி வந்த தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளி மகளை, தூக்கிக் கொண்டு வந்த அவரது தாயார், பிளஸ் 2 தேர்வு எழுத வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி சர்மிளாவை, அவரது தாயார், பொதுத்தேர்வு எழுதுவதற்காக தூக்கிக் கொண்டு வந்ததுடன், தேர்வு அறையில் அவரது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து சொல்லிவிட்டு சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு..!
இதுதான் தமிழ்ச் சமூகம்!
கல்விதான் நம் உயிரினும் மேலானது!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post இதுதான் தமிழ்ச் சமூகம்; கல்விதான் நம் உயிரினும் மேலானது!: +2 தேர்வெழுத சென்ற மாணவர்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு!! appeared first on Dinakaran.