ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணியின் ரிஷப் பந்த் கால் எலும்பு முறிவுடன் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸர் அடித்தும், அரைசதம் அடித்தும் பெரிய அளவில் இந்திய அணிக்கு அளித்த ஊக்கம் பவுலர்கள் மனதில் ஏறவில்லை. எதற்காகப் பந்து வீசுகிறோம் என்று தெரியாமலேயே வீசினர். பும்ரா உட்பட அனைவரும் சொதப்பலோ சொதப்பல். கில்லின் களவியூகம் பார்க்கச் சகிக்கவில்லை. ரன் தடுப்பு களவியூகம் அமைத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களை செட்டில் ஆக விட்டார்.
ஜஸ்பிரித் பும்ராவின் பந்தில் ஒன்றுமே இல்லை, ஒன்றிரண்டு பந்துகள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி டக்கெட்டை பீட் செய்ததோடு சரி, மற்றபடி எந்த ஒரு உத்தியும் இல்லாத அரைகுறை கால் நகர்த்தல்களுடன் அசிங்கமாக ஆடிவரும் கிராலியையும் பும்ராவினால் வீழ்த்த முடியவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்து பாஸ்பால் அதிரடியெல்லாம் ஆடவில்லை, ஆனால் அப்படி ஆடுங்கள், ஆடுங்கள் என்று இந்தியப் பந்து வீச்சு அவர்களை வலியுறுத்தியது என்பதுதான் அதிர்ச்சியளித்தது. அதனால்தான் 46 ஓவர்களில் 225 ரன்களை எடுத்துள்ளனர், இதனால் இந்த டெஸ்ட்டை இந்தியா தோற்பதோடு தொடரையும் இழக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.