புதுடெல்லி: இந்திய ஸ்டார்ட்அப்கள் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுக்கான மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றிய நாட்டின் இளைஞர் சக்தியின் வலிமை மற்றும் திறன்களை எண்ணி பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் இயக்கம் தொடங்கப்பட்டதன் 9ம் ஆண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "ஸ்டார்ட்அப் இயக்கம் தொடங்கப்பட்டதன் 9ம் ஆண்டு என்ற ஒரு மைல்கல் முயற்சியை இன்று நாம் கொண்டாடுகிறோம். இது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு திட்டமாகும். ஏனெனில், இது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாக உருவெடுத்துள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றியுள்ளது.